வியாழன், 16 ஜனவரி, 2020

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

 

ந்திரனின் நட்சத்திரமான ரோகிணி  நட்சத்திரமானது அதிகம் ஒளிரும் தன்மை கொண்ட நட்சத்திரமாகும். சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷபராசியில் அமைந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி.  இந்த ரோகிணி நட்சத்திரத்தில்தான் கிருஷ்ண பகவான் அவதரித்தார். அவருடைய அவதாரம் கம்சனின் அழிவுக்குக் காரணமாக இருந்ததால், 'ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது' என்று சொல்லுவதுண்டு. ஆனால், அது முற்றிலும் சரி இல்லை. புதனும் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு உரிய கிரகமும் இருக்கும் நிலையைப் பொறுத்தே தாய்மாமனுக்கு ஆகுமா, ஆகாதா என்பதை முடிவு செய்யவேண்டும். 

ரோகிணி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள்,  அமைதியான வாழ்க்கையையே எப்போதும் விரும்புவார்கள். எல்லோரிடமும் மென்மையாகப் பேசிப் பழகுவார்கள். இனிப்பு வகைகளை விரும்பி உண்பார்கள். பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படமாட்டார்கள்.
ஒருவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், உங்களிடம் மிகவும் பிரியத்துடன் நடந்துகொள்வார்கள். சகல வித்தைகளையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ச்சி பெற்று விளங்குவார்கள். பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்றாலும் தாய்மொழியை மிகவும் நேசிப்பார்கள். சிலர் எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிவதை விரும்புவார்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுச் செய்பவராக இருப்பர். தங்களது பேச்சாலும் செயலாலும் எதிரிகளைக்கூட கவர்ந்துவிடுவார்கள். நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்பார்கள். உள்ளதை உள்ளபடி பேசுவார்கள். ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைப் பெற்றிருப்பார்கள். கலைத்துறை சார்ந்த போட்டிகளில் பரிசும் பதக்கமும் பெறுவார்கள். கற்பனை வளம் அதிகம் பெற்றிருப்பார்கள். மனைவிக்கு அல்லது கனவனுக்கு விட்டுக்கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள்.

பிள்ளைகளிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்வார்கள். அதன் காரணமாகவே அவர்களை அதிக சுதந்திரம் கொடுத்து வளர்ப்பார்கள். சிலர் திரைப்படத்துறையில் பெயரும் புகழும் பெற்றிருக்கக்கூடும். எப்போதும் சுகபோகங்களுடன் வாழவேண்டுமென்று விரும்புவார்கள். பொதுநல சேவையில் ஈடுபடுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். நீங்கள் முதலாளியாக இருந்தாலும், உங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களை மதிப்புடனும் அன்புடனும் நடத்துவார்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தருவார்கள். தோற்றத்தை வைத்து உங்கள் வயதை கணிக்கமுடியாது.

இனி நட்சத்திர பாதவாரியாக பலன்களைப் பார்ப்போம்

ரோகிணி 1-ஆம் பாதம் 

நட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்

கம்பீரமான தோற்றம் பெற்றிருப்பீர்கள். நன்றாக அலங்கரித்துக்கொள்வதை விரும்புவீர்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவுகளைச் செய்வீர்கள். தவறு செய்தால் தட்டிக்கேட்பீர்கள். மற்றவர்கள் தவறான  பாதைக்குச் செல்லாமல் வழிநடத்துவீர்கள். விளையாட்டில் ஆர்வம் இருப்பதால், படிப்பில் அவ்வளவாக அக்கறையில்லாமல் இருப்பீர்கள். அதன் காரணமாக படிப்பில் தடைகள் ஏற்படக்கூடும். காதலுக்கு முக்கியத்துவம் தரும் நீங்கள், காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்வீர்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். முன்கோபத்தின் காரணமாக மற்றவர்களிடம் கடுமையாகப் பேசுவீர்கள். ஆனாலும் உடனே மறந்து சமாதானக் கொடி உயர்த்துவீர்கள். காரமான உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவீர்கள். தற்பெருமை கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்கள் நவாம்ச அதிபதியாக செவ்வாய் இருப்பதால், காவல், ராணுவம் போன்ற துறைகளில் சாதனையாளர்களாக விளங்குவீர்கள். நினைத்ததை எப்படியும் அடைந்துவிடுவீர்கள். 

ரோகிணி 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்

ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்த நீங்கள் சாந்தமாக, சாத்விக குணம் கொண்ட வர்களாக இருப்பீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவீர்கள். உங்களுடைய அனுசரித்துச் செல்லும் பண்பின் மூலம் பல நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். எப்போதும் துறுதுறுப்பாக எதையேனும் செய்துகொண்டிருப்பீர்கள். கல்வியில் அதிக ஆர்வம் பெற்றிருப்பீர்கள். தேர்வுகளில் முதலிடம் பிடிப்பீர்கள். இசையில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். மற்றவர்களால் முடியாத காரியங்களைக்கூட சவாலாக எடுத்து முடித்துக்காட்டுவீர்கள்.  மென்மையான சுபாவத்தின் காரணமாக அனைவரின் அன்புக்கும் பாத்திரமாவீர்கள். கணிதத்துறையிலும் ரசாயனத்துறையிலும் ஈடுபாடுள்ளவர்களாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் விடாப்பிடியாக இருந்து முடித்துக் காட்டுவீர்கள். இயல்பிலேயே தர்ம சிந்தனை அதிகம் பெற்றிருப்பீர்கள். சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களில் சிலர் ஜோதிடத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். 

ரோகிணி 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - புதன்

சுகபோகங்களுடன் வாழ விரும்புவீர்கள். வாழ்க்கையில் சுயமுயற்சியால் முன்னேற வேண்டுமென்று நினைப்பீர்கள். பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனாலும், ஒன்றும் தெரியாதவர்போல் காட்டிக்கொள்வீர்கள். இசைக்கலையில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். பெரும்பாலான நேரங்களில் கனவுலகில் சஞ்சரிப்பீர்கள். சிறு வயதிலிருந்தே இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். கதை, கவிதை எழுதுவதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்களாக இருப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களால் பாராட்டப்படுவீர்கள். இனிப்புச் சுவையில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள். பிள்ளைகளிடம் அதிக பிரியம் கொண்டிருப்பீர்கள். எந்தத் துறையாக இருந்தாலும் வித்தியாசமாகச் செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். பல விஷயங்களைச் செய்வதை விட ஒரு விஷயத்தை வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். 

ரோகிணி 4-ஆம் பாதம்

நட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - சந்திரன்

எப்போதும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று நினைப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எல்லோரும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். கோபத்தினால் திருத்துவதை விட அன்பினால் திருத் தவே விரும்புவீர்கள். பிள்ளைகளிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் மாறாத காதல் கொண்டிருப்பீர்கள். ஒருவரை மிகச் சரியாக எடைபோட்டு விடுவதில் வல்லவராக இருப்பீர்கள். இதனால் யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. மற்றவர்களின் பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு சொல்வதில் வல்லவராக இருப்பீர்கள். இதன் காரணமாகவே பலரும் தங்கள் பிரச்னைக்குத் தீர்வு தேடி வரும் நபராக இருப்பீர்கள். பிதுர் வழிச் சொத்துகளும், தாய்மாமன் வழியில் சொத்துகளும் கிடைக்கப்பெறுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். எப்போதும் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவீர்கள். வீட்டிலும் அவ்வப்போது உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். சினிமா, ஜோதிடம் ஆகிய துறைகளில் பெயரும் புகழும் பெற்று விளங்குவீர்கள்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீகிருஷ்ணர், வெங்கடேசப் பெருமாள்

அணியவேண்டிய நவரத்தினம்: முத்து

வழிபடவேண்டிய தலங்கள்: திங்களூர், திருப்பதி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக